யாழ். மாவட்டத்தில் படைத்தளபதி இரகசிய ஆயுதக் குழுக்களை உருவாக்கி இயக்கிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருக்கும் சந்தேகத்தை யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நிராகரித்துள்ளார்.
இராணுவத்தினரைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் தமக்குக் கீழ் இயங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ரணில் விக்கிரமசிங்க, யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி ஆயுதக் குழுக்களை உருவாக்கி இயக்கிக் கொண்டிருப்பதாக சந்தேகிப்பதாகவும் தனது குற்றச்சாட்டில் உண்மையில்லை எனில் தமது பக்க நியாயத்தை அவர் எழுத்து மூலமாகத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
வலிகாமம் வடக்கில் மக்களை மீள குடியமர்த்துமாறும் அங்குள்ள வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறும் வலியுறுத்தி அங்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது சிலரால் குழப்பம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்படி விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கருத்து தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டை அவர் முற்றாக நிராகரித்தார்.
“எனக்குக் கீழ் 13,500 படையினர் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் ஆயுதம் தாங்கியவர்கள். அவர்கள் மக்களின் நலனுக்காக செயற்பட்டு வருகின்றனர். அவர்களைத் தவிர வேறு எந்த இராணுவமும் எனக்குக் கீழ் இயங்கவில்லை’ என்று மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க இதன்போது கூறினார்.
யாழ். இராணுவ தளபதியின் கீழ் இரகசிய ஆயுதக் குழுக்கள்! ரணிலின் குற்றச்சாட்டை மறுக்கிறார் இராணுவ பேச்சாளர்
வடக்கில் எந்தவொரு இரகசிய ஆயுதக் குழுக்களும் தனியாக இயங்கவில்லை. இராணுவத்தைத் தவிர சட்டவிரோதமாக எந்தவொரு ஆயுதக் குழுக்களும் இயங்க முடியாது. அந்தச் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
வடக்குக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது யாழ். இராணுவ தளபதியின் கீழ் இரகசிய ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கருத்து தொடர்பாக கேட்ட போதே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறுகையில்,
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர எந்த ஒரு ஆயுதக் குழுக்களும் இரகசியமாக இயங்குவதில்லை. அவ்வாறு கூறப்படும் கருத்துக்களை இராணுவம் முற்றாக மறுக்கின்றது. அவற்றில் எந்தவித உண்மைகளும் கிடையாது.
யாழ். குடாநாடு உட்பட சகல பிரதேசங்களிலும் சுமார் 15 ஆயிரம் இராணுவ வீரர்களே தற்போது சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய அந்தந்த பிரதேச கட்டளைத் தளபதிகளினால் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் நலன் வேலைத் திட்டங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனியாகவோ இரகசியமாகவோ எந்த ஒரு ஆயுதக் குழுக்களையும் வைத்திருக்க வேண்டிய எந்தவித தேவைகளும் கிடையாது என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
சிலர் தமது அரசியல் நோக்கங்களை அடிப்படையாக வைத்து கருத்துக்களை வெளியிடுவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.