இந்த ஆண்டு 26,944 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
உயர்கல்வி அமைச்சில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
மேலதிகமாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ள 5182 மாணவர்களுக்கு என சகல பல்கலைக்கழகங்களிலும் வளங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைக்கமைய புதிய பாடத்திட்டம், பழைய பாடத்திட்டம் என வெவ்வேறாக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதே போன்று உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி மேலதிகமாக 5182 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்களை மேலதிகமாக இணைத்துக் கொள்ளத் தேவையான கட்டட மற்றும் சகல பௌதிக வளங்களும் சகல பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதற்குத் தேவையான நிதியை அரசு வழங்கி உள்ளது. பல்கலைக்கழகங்களில் பௌதிக வளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக அரசு மேலதிகமாக 4000 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
5 பல்கலைக்கழகங்களில் 7 புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அடுத்த மாதம் சகல பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பழைய பாடத்திட்டத்தின் பிரகாரம் 13,474 பேரும், புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம் 13,470 பேரும் பல்கலைக்கழகங்களுக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். என்றார்.