மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம்!!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

தனது பணியிடத்திற்குள் அவசரகாலப் பணிகளில் ஈடுபட்டு இருந்த ஒரு பெண் மருத்துவர் மீது நடந்த பாலியல் வன்கொடுமையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இச்செயலை மேற்கொண்ட சந்தேகநபரை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தவும், தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி செயல்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்துகிறோம்.

இந்த துரதிர்ஷ்டவசமான, அருவெருக்கத்தக்க செயலுக்கு ஆளான மருத்துவரின் தனியுரிமை மற்றும் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். வைத்தியர்களுக்கான பணியிடங்களின் பாதுகாப்பை விரைவில் உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் வைத்தியர்கள் தமது பணிகளைத் தொடர்வது சவாலான விடயமாக அமையலாம். சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு ஆகிய இரண்டும் ஒன்று என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் தங்கள் கடமைகளை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் பொறுப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இதேவேளை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் செவ்வாய்க்கிழமை (11) காலை 10. 00 மணி முதல் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு காலவரையரையின்றி நீடிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதுடன் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை கிளையின் செயலாளர் வைத்தியர் சசிக விதானகே தெரிவித்துள்ளார்.

Related Posts