தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் எஸ்.பி. சாமி, ஞாயிறு தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர், வீரகேசரி பத்திரிகையின் வடபிராந்திய ஆசிரியர் ஆர். பாரதி ஆகியோரின் மறைவுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் அனுதாபம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு அனுதாபம் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் எஸ். பி. சாமி அண்மையில் காலமானார். அவரின் மறைவு தமிழ் ஊடக உலகிற்கு பெரும் இழப்பாகும். அவர் ஒரு ஊடக ஜாம்பவான் .இலங்கையில் தமிழ் ஊடகத்துறைக்கு பெருமை சேர்த்தவர்.
அதேபோன்று ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் இராஜநாயகம் பாரதியும் அண்மையில் காலமானார். அவரின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கும் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். அவர் இறுதியாக வீரகேசரி பத்திரிகையின் வடபிராந்திய ஆசிரியராக கடமையாற்றினார்.இவர்கள் இருவரின் மறைவுக்கு எமது அனுதாபங்களை இந்த உயரிய சபையில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.