யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு , பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேக நபர் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் , வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று , வெளிநாட்டு பணத்தினை உள்ளூர் பெறுமதிக்கு மாற்ற வங்கியில் கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் காணொளி பதிவிட்டு, வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்கள் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
அதேபோன்று சந்தேக நபர் சில வாரங்களுக்கு முன்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தினுள் சென்று , பொலிஸார் முறைப்பாடுகளை பதிய கால தாமதம் செய்வதாக நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பொலிஸாருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல மெய்வல்லுனர் போட்டி ஒன்றுக்குச் சென்று , மாணவிகளின் அனுமதியின்றி , ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்ட போது , பாடசாலையில் கடமையில் நின்ற பொலிஸார், அதிபரின் அனுமதியின்றி மாணவிகளைக் காணொளி எடுக்க முடியாது என அறிவுறுத்திய போது , பொலிஸ் உத்தியோகத்தர்களுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டு , அவற்றினையும் காணொளிகளாக பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து , பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேக நபர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.