தையிட்டியில் அந்த பகுதியை சேர்ந்த தமிழ் குடும்பங்களின் காணி உரிமைகளில் கை வைவக்கின்ற போது, ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கை வைப்பதற்கு அது சமமானது என நாங்கள் கருதவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஏனைய கட்சிகள் கட்சிபேதங்கனை புறந்தள்ளிவிட்டு இந்த போராட்டத்திற்கு ஆதரவாக போராடும் மக்களிற்கு ஆதரவாக வந்திருக்கின்றன.
சட்டத்தின் ஆட்சி குறித்து கதைக்கும் அரசாங்கம் தான் தொடர்ந்தும் இந்த அநியாயத்தை செய்து கொண்டிருக்கின்றது.
சட்டத்தின் ஆட்சி என்றால் சட்டத்தை மாத்திரம் கருத்தில் எடுக்கவேண்டும் வேறு எதனையும் கருத்தில் எடுக்ககூடாது. அது பௌத்த விகாரையாக இருக்கலாம், சைவ கோயிலாக இருக்கலாம், முஸ்லீம் பள்ளிவாயிலாக இருக்கலாம், கிறிஸ்தவ தேவாலயமாக இருக்கலாம், சட்டத்தை மீறி எவர் நடந்தாலும், எப்படி ஒரு பொதுமகன் சட்டத்தை மீறி ஒரு கட்டிடத்தை கட்டினால் அகற்றவேண்டுமோ அதேபோன்று தான் இது சட்டவிரோதமானது என கருதபட்டு அகற்றப்பட்டே ஆக வேண்டும்.
இது அகற்றப்படாவிட்டால் இதனை ஒரு முன்னுதாரணமாக வைத்து ஒவ்வொரு இடத்திலும் ஆக்கிரமிக்க விரும்புகின்ற ஒவ்வொரு இடத்திலும், சிங்கள மயப்படுத்தவிரும்புகின்ற ஒவ்வொரு இடத்திலும் இதேபோன்ற ஒரு முன்னுதாரணத்தை, பயன்படுத்தி தொடர்ந்தும் தமிழர் தாயகத்தின் அனைத்து பிரதேசங்களிலும்,ஆக்கிரமிப்புகள் நடைபெறும் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.
இந்த இடத்தில் இந்த இடத்தின் குடும்பங்களின் காணி உரிமைகளில் கைவக்கின்ற போது,ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கைவைப்பதற்கு சமமானது என நாங்கள் கருதவேண்டும்.
சட்டத்தின் ஆட்சியை மதிக்கின்ற எவராகயிருந்தாலும் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கவேண்டும்.