தையிட்டி விகாரையின் காணி தொடர்பில் இன்று (11) பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. காணி உரிமையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். விகாரைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குப் பதிலாக, மாற்றுக்காணிகளைப் பெறுவது தொடர்பில் தாம், ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இவ்விடயம் குறித்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடாமல் வேறு நபர்களுடன் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின்போது இந்தக் காணி தொடர்பான விவகாரம் பேசப்பட்டது. அர்ச்சுனா எம்பி மற்றும் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள், மேற்படி காணிக்காக மாற்றுக்காணிகளை பெற்றுக் கொள்வதற்கு காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வாறு எந்த இணக்கப்பாட்டையும் தாம், வழங்கவில்லை. அது அவர்களால் தன்னிச்சையாக வழங்கப்பட்ட கருத்து என்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.காணிகள் மீளக் கிடைப்பதற்கு அரசாங்கம் வழி செய்ய வேண்டும் எனக் கோரியே, இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.