இந்த வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா இராமநாதன் அமர்ந்து இனவாதம் குறித்து அறிக்கை வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 10ஆவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய எம்.பிக்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு இன்று (25) முதல் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை 3 நாட்களுக்கு பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01 இல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.