வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியிற்கு மேலாக நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது இன்று காலை மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியின் மத்தியில் தாழ் அமுக்கமாக மாற்றமடையும். இந்த தாழ் அமுக்கமானது மட்டக்களப்பில் இருந்து சுமார் 500 கிலோமீற்றர் தொலைவில் காணப்படும். இது மேலும் விருத்தியடைந்து நாட்டின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
ஆகையினால் இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 35 – 45 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றராக அடிக்கடி அதிகரித்துக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பான நிலையிலும் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.