வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிற்கு மேலாக நாளையளவில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் பிற்பாடு இது தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும்.
இந்த தாழ் அமுக்கமானது மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லக்கூடும். ஆனபடியினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மேலும் வழங்கப்படுகின்ற வானிலை எதிர்வுகூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொது மக்கள் வேண்டிக்கொள்ளப் படுகின்றனர் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
மத்திய , சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.