லலித் மற்றும் குகன் கடத்தலுடன் அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுது ஆடிகல சாட்சியமளித்துள்ளார்.
கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகனின் வழக்கு விசாரணை யாழ். நீதிவான் நிதிமன்றில் நேற்றய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதிமன்றில் ஆஜராகிய திமுது ஆடிகல மன்றில் சாட்சியமளிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி கொடகமவில் உள்ள எனது வீட்டில் வைத்து நான் கடத்தப்பட்டதுடன், குமார் குணரத்னம் என்னுடன் கடத்தப்பட்டார். நாங்கள் இருவரும் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தோம்.
எங்களை கடத்தியவர்கள் லலித் மற்றும் குகன் பற்றி எங்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன்போது அவர்கள் இருவரும் எங்கு என நாங்கள்?கேட்டபோது, அவர்கள் உயிரோடு தான் இருக்கின்றார்கள். எப்போதாவது ஒருநாள் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என கடத்தியவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், அந்த காலப்பகுதியில் தான் லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டுள்ளனர். நானும், குமார் குணரத்னவும் ஒரே நாளில் கடத்தப்பட்டோம். ஆனால், குமார் குணரத்னம் அவுஸ்திரேலியாவிற்கு அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டுள்ளார்.
அவ்வாறு பார்க்கும் போது, லலித் மற்றும் குகனின் கடத்தலில் அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கின்றது என்றார்.
அதேவேளை, அரச சட்டத்தரணிகள் திமுது ஆடிகலவை லலித் மற்றும் குகன் கடத்தல் மற்றும் காணாமல் போன விடயங்கள் மற்றும் அவர்கள் இருவரும் மேற்கொண்ட செயற்திட்டங்கள் குறித்து குறுக்கு விசாரணை செய்தார்.
சாட்சியங்களை தொடர்ந்து யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி க.சிவகுமார் வழக்கினை ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.