கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக செல்லவில்லை. தேர்தலுக்கு பின்னர் எமது காரியாலயம் நிரம்பி வழியத் தொடங்கியது. இதன் பலன் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரதான தேர்தல் பிரசார கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று மாலை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தாரா? முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம் வந்தாரா?
நாம் வந்தோம். தேர்தலை வெற்றி கொள்ள மட்டும் எமக்கு யாழ்ப்பாணம் தேவை இல்லை. யுத்தம் இல்லாத நாட்டை உருவாக்கவும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் யாழ்ப்பாணம் தேவை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 27000 வாக்குகள் கிடைத்து. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது அது மிகவும் சிறியது. ஆனாலும் அது எமக்கு மிகப்பெரியது.எமது செய்தி தமிழ் மக்களிடம் செல்லவில்லை. தெற்கில் நாம் வேலை செய்தளவுக்கு வடக்கில் வேலை செய்யவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் வடக்கில் உள்ள கட்சிகளின் தயவுடன் ஏனைய கட்சிகள் வடக்குக்கு வந்தது. அவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களையே ஒன்றிணைத்தார்கள்.மக்களை ஒன்றிணைக்கவில்லை.
தேசிய மக்கள் சக்தியில் நாங்கள் வடக்கில் தலைவர்களுடன் பேசியதுடன் மக்களுடன் இணைந்து அரசியல் செய்கிறோம்.
தெற்கிற்கு எதிராக வடக்கிலும் வடக்கிற்கு எதிராக தெற்கிலும் செயற்பட்டு எவ்வாறு ஒற்றுமையை காட்டுவது. நாம் ஒரு அரசியல் கட்சியின் கீழ் ஒன்றிணைய தயார் என்பதை இந்த கூட்டம் காட்டுகிறது.
நான் சொல்லும் விடயங்கள் உங்களுக்கு தேவை இல்லையா? தேவை தானே! பழைய அரசியலை கைவிடுவோம்.
புதிய அரசியலுக்கு வருவோம். சிங்கள தமிழ் முஸ்லிம் பேதமின்றி பிரியாது சண்டை பிடிக்காது வாழ்வோம். அது தோல்வியடைந்த பழைய அரசியல். நவம்பர் 14 ம் திகதி நாம் பங்களித்து சக்தி வாய்ந்தத அரசாங்கத்தை முன்கொண்டு செல்வோம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பலரும் வெளிநாட்டில் வியாபாரிகளாக கல்விமான்களாக ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர்.
யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப நீங்கள் யோசிப்பீர்கள் தானே? உங்கள் அறிவை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள்.
உங்கள் நிதியை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வாருங்கள். இந்த நேரத்தில் கொண்டு வராத நிதி மற்றும் அறிவால் பலனில்லை . எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் ஒரே எதிர்பார்ப்பு இருக்கிறது. அது இந்த நாட்டை கட்டியெழுப்புவது தான் என்றார்.