அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் காணப்படும் குறை, நிறைகள் தொடர்பான அறிக்கையொன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துறை விநாயகமூர்த்தியினால் இந்த அறிக்கை, இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது. அறிக்கையை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதனை யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் உடனடியாக கையளித்துவிட்டார்.
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் காணப்படும் குறை, நிறைகளை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்த்த ஜனாதிபதி,யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கு தான் தயார் என்றும் நிறைவு பெறாத திட்டங்களை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணித்தார்.
அங்கு தொடரந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த நாட்டு மக்கள் இன, மத, பேதங்களை மறந்து அனைவரும் ஒரு தாய் மக்கள் போல சேவையாற்ற வேண்டும் என்றும் தமிழ் மக்கள் எந்தளவுக்கு தன்னுடன் இணைந்து உள்ளார்களோ அந்தளவுக்கு அவர்களுடன் தானும் இணைந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ‘நான் அரசியலில் இருக்கும்வரை அபிவிருத்தி என்பது முக்கியமானது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன். மக்களும் அரச அதிகாரிகளும் தன்னுடன் எவ்வளவு தூரம் இணைந்திருக்கின்றார்களோ அவ்வளவு தூரத்திற்கு நானும் இணைந்திருப்பேன். மக்களின் அபிவிருத்தியே அரசாங்கத்திற்கு முக்கியமானதாகும். யாழ் மக்களின் அபிவிருத்திருத்திக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்’ என்றார்.
யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் போக்குவரத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவில் காங்கேசன்துறை வரை ரயில் பயணம் மேற்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இதன்போது, ‘வலி வடக்கு பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலய வேலிகள் போடப்பட்டுள்ளதால் எவ்வாறு யாழிலிருந்து காங்கேசன்துறை வரை ரயில் பாதையை அமைக்க முடியும்’ என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் வினவினார்.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, ‘காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை உயர் பாதுகாப்பு வலய வேலியை பிய்த்துக் கொண்டு செல்லும் என்று கூறிச் சிரித்தார்.
அந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பாரம்பரிய கைத்தொழில், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, ‘ரயில் போக வேண்டிய நேரத்தில் போய் நிற்க வேண்டிய இடத்தில் நிற்கும்’ என்றார். இதன்போது சபையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.