எதிர்வரும் பொதுத்தேர்தலில் வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சியினால் வட, கிழக்கு மாகாணங்களில் 15க்கு குறையாமல் ஆசனங்களை வென்றெடுக்க முடியும் என அக்கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமது கூட்டணி இவ்விரு மாகாணங்களிலும் மொத்தமாக 6 – 8 ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்ப்பதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இம்முறை தேர்தலில் தமது கட்சி 10க்கு குறையாத ஆசனங்களைப் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுத்தாக்கல் என்பன கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் நாடளாவிய ரீதியில் தமது தேர்தல் பிரசாரப்பணிகளை முன்னெடுத்துவருகின்றன.
அந்த வகையில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களில் இருந்தும் பாராளுமன்றத்துக்குப் பிரதிநிதிகளை அனுப்பக்கூடிய கட்சியாக தமிழ் அரசுக் கட்சி இருப்பதாகவும், ஆகவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் தம்மால் 15க்கு மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றமுடியும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளடங்கலாக ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் தமது பிரசாரங்களின்போது பெரும்பாலும் ‘ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தைக் களவெடுத்துவிட்டது’ என்ற விடயத்தையே கூறிவருவதாகவும், இது அக்கட்சிகள் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கண்டு அச்சமடைந்திருப்பதையே காண்பிப்பதாகவும் சங்கு சின்னத்தில் போட்டியிடும் தர்மலிங்கம் சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.