புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை (27) எளிமையாக இடம்பெற்ற நிகழ்வில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வு இன்றையதினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பொறுப்பேற்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் செப்டெம்பர் 23 ம் திகதியன்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவால் நா.வேதநாயகன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மிக எளிமையான முறையில் நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் அணி வகுப்பு மரியாதை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.