நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக மைதானத்தை பெறுவதில் சகோதரர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நெல்லியடியில் உள்ள மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தேர்தல் பிரச்சார கூட்டம் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
குறித்த மைதானத்தில் எதிர்வரும் வாரம் எதிர்க்கட்சி தலைவரின் பிரச்சார கூட்டத்தினை நடாத்த ஒருவர் மைதானத்தினை பார்வையிட வந்துள்ளார்.
அந்நிலையில் ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானத்தை பெற்றவர் , எதிர்க்கட்சி தலைவரின் நிகழ்வுக்கு மைதானத்தை பெற்றவருடன் முரண்பட்டு கொண்ட நிலையில், ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானம் பெற்றவர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை முரண்பட்டு கொண்ட இருவரும் பிரபல வர்த்தகர்கள் என்பதுடன் , சகோதரர்களும் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.