இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்’ என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க உறுதியளித்துள்ளார்.
யாழ். பல்கலைக் கழகத்தில் தீபமேற்றுவதற்கு தடை இல்லை. ஆனால் இராணுவத்தினரால் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூறுவதற்காகவே அம்மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தீபமேற்றினார்கள். அது குற்றம். அதற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் இருவர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய இருவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என யாழ். கட்டளைத் தளபதி மேலும் கூறினார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு சுமார் ஒன்றரை மாதங்களாக அங்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் கடந்த மாதம் 22ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். ஏனைய இருவரும் தொடர்ந்தும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.