யாழில் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்படுவதாக மகஜர் கையளிப்பு

muslim_jaffnaமீள்குடியேற்ற நடவடிக்கைகளில் யாழ்ப்பாண முஸ்லிம் சமூக புறக்கணிக்கப்பட்டு வருவதாக வலியுறுத்தும் மகஜர் ஒன்று யாழ். மற்றும் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தினால் யாழ். மாநகரசபை முஸ்லிம் உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.

யாழ். நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள பெரிய பள்ளியில் சனித்கிழமை மதியம் 1.30 மணியளவில், மேற்படி சம்மேளனத்தின் தலைவர் கே.எம்.நிலாமினால் யாழ். மாநகரசபை உறுப்பினர்களான எம்.எம்.முஸ்தபா மற்றும் பி.எம்.சரபுல் அனாம் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘முஸ்லிம் மக்கள் நிர்வாக ரீதியில் பாதிக்கப்படுகின்றார்கள். கிராம சேவகரின் கெடுபிடிகள், புதிய சோனகத் தெரு மக்களின் காணி அத்தாட்சி பத்திரத்தினை வழங்க மறுப்பது, மழை வெள்ளம் ஏற்படும் காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு பாராபட்சம் காட்டப்படுகின்றமை. இந்திய வீட்டுத் திட்டத்தில் புறக்கணிப்பு, வெளிநாட்டு உதவிகள் புறக்கணிப்பு, அரச அதிகாரிகள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களது உதவித் திட்டங்களில் புறக்கணிப்பு, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவித் திட்டங்கள் புறக்கணிப்பு, சேதமாக்கப்பட்ட வீடுகள் திருத்தப்படாமை, மக்களது சேவைக்காக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதனை மறுதலிக்கமாட்டீர்கள் என நம்புகின்றோம்.

அதேவேளை, 2,043 குடும்பங்கள் யாழப்பாணத்தில் மீள்குடியேற வந்திருந்தனர். அதிகாரிகளது மனிதாபிமானமற்ற செயற்பாடுகளினால் மனம் விரக்தியடைந்த முஸ்லிம் மக்கள் மீண்டும் அகதி வாழ்வை நோக்கித் திரும்பி விட்டார்கள்.

தற்போது 617 குடும்பங்கள் வரை தட்டுத் தடுமாறி யாழப்பாணத்தில் அடிப்படை வசதிகளின்றி வாழ்கின்றார்கள். பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் இன்றும் பல குடும்பங்கள் யாழ்ப்பாணத்தினை விட்டு வெளியேறிவிடும் என்பது தூர சிந்தனை கொண்டோரின் எதிர்பார்ப்பாகும்.

நீங்கள் எக்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் சரியே. அது இப்போதைக்கான இடையூறாக அமையப்பெற முடியாது. காரணம் அக்கட்சிகள் எல்லாம் மக்களது பொது சேவைக்கானவையே.

உங்களது சாணக்கியத்தின் மூலம் உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள். நம்பிக்கையுடன் உங்களது பதவிகளை துறந்து மக்களோடு இணைந்து ஜனநாயக நீரோட்டத்தில் குரல் கொடுக்க வருமாறு யாழ்ப்பாண மீள்குடியேறி மீண்டும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களாகிய நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்’ என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts