அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முதுகெலும்பு இல்லை என முஸ்லிம் தமிழ் அமைப்பின் தலைவர் அஸாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா அளித்துள்ள பதிலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த பதிலை அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து தயாரிப்படுத்தியதாக கூறுவது இன்னும் இன்னும் வெட்கக்கேடான விடயமாகும்.
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்கள் எனது கவனத்திற்கு கொண்டுவரவில்லை என கல்முனையில் வைத்து ஜனாதிபதி தெரிவித்தார். இதன் மூலமாக பள்ளிவாயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவோ எந்தவொரு பள்ளிவாசலும் தாக்கப்படவில்லை என்று பதிலளிக்கையில் அரசாங்கத்தில் இருக்கின்ற எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் பதிலளிக்காது கைக்கடடி வாய்மூடி தலையை அசைத்து கொண்டிருக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. இவற்றை தட்டிக்கேட்கமுடியாத இன உணர்வு, வெட்கம் இல்லாத முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சு பதிவிகளை துறக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள அஸாத் சாலி மன்றத்தில் நேற்று இடம்பெற்றஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.