பாடசாலை மாணவர்களிடம் முறையற்ற விதத்தில் பணம் அறவிடும் அதிபர் அல்லது ஆசிரியர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யும் வகையில் புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கமைய இப்புதிய சுற்றறிக்கையைக் கல்வியமைச்சு தயாரித்து வருவதாகவும் இதன்படி மேற்படி குற்றச்சாட்டுக்கு இலக்காகும் ஆசிரியர் அல்லது அதிபர் முதலில் பதவி நீக்கம் செய்யப்பட்டு அதன் பின்னரே விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக்கு கெளரவமளித்து செயற்பட்டு வருகிறது. இதற்கிணங்க கல்வித்துறைக்கென தேசிய கொள்கை உள்ளது என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
மாணவர்களிடம் பணம் பெறுவது குற்றம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள போதும் சிலர் இது தொடர்பான விடயங்களுக்காக மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் அரச சேவை ஆணைக்குழுவுக்கும் சென்று முறையிடுகின்றனர்.
இவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய சுற்றறிக்கை இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.