தமிழ் மக்களை மரண பயத்தினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது இவ்விடயங்களை தமிழ் ஊடகங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருகின்ற பணியை துணிச்சலுடன் மேற்கொள்கின்றது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே தமிழ் ஊடகங்களை மௌனிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
யாழ் தினக்குரல் பத்திரிகையின் விநியோக முகாமையாளர் சிவகுருநாதன் சிவகுமார் மீதான தாக்குலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தினக்குரல் பத்திரிகையின் விநியோக முகாமையாளர் சிவகுருநாதன் சிவகுமார் அவர்கள் பத்திரிகை விநியோகப் பணிகளுக்காக இன்று வியாழக்கிழமை (நேற்று) அதிகாலை பருத்தித்துறை சாலையில் சிறுப்பிட்டிப் பகுதியில் சென்றுகெண்டிருந்தபோது வழிமறிக்கப்பட்டு கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் எடுத்துச் சென்ற பத்திரிகைகளும் அவரது மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.
காட்டுமிராண்டித்தனமானதும், மிலேச்சத்தனமானதுமான இத்தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மூன்று உந்துருளிகளில் வந்திருந்த 6பேர் கொண்ட குழு ஒன்றே இத்தாக்குதலை நடாத்தியுள்ளது. கடந்த மாதம் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளரான நா.பிரதீபன் அவர்களும் இதே பாணியில் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது தினக்குரல் பத்திரிகையின் விநியோக முகாமையாளர் தாக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காத, கருத்துக்களை கருத்துக்களால் வெல்லத் திராணியற்று வன்முறைக் காலாசாரத்திலும் கொலைக் கலாசாரத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள ஜனநாயக விரோத சக்திகளே இத்தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசத்தின் இருப்பை அழிப்பதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் போராட்டங்களில் ஈடுபடவோ, கருத்துக்களை கூறவோ முடியாதபடி தமிழ் மக்களை மரணபயத்தினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இவ்விடயங்களை தமிழ் ஊடகங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருகின்ற பணியை துணிச்சலுடன் மேற்கொள்கின்றது. அதனை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே தமிழ் ஊடகங்களை மௌனிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றது. இத்தாக்குதல்கள் கருத்துச் சுதந்திரத்தினையும், ஊடக சுதந்திரத்தினையும் கேலிக்கூத்தாக்குகின்றது.
யாழ். குடாநாட்டில் ஒவ்வொரு சந்துபொந்துகளிலும் சிறீலங்கா இராணுவக் கண்காணிப்பு உள்ள நிலையில் இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச் செல்ல முடிந்துள்ளதென்றால் மேற்படி தாக்குதல் சம்பவமானது ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்குத் தெரியாது ஒருபோதும் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் காயமடைந்து யாழ். போதனா வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வரும் தினக்குரல் விநியோகஸ்தரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.