கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்ற போது தானும் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சாதாரணமாக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை வெளிப்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டதானது இலங்கை அரசின் கோரமுகத்தையும் அராஜகத்தையும் சர்வதேசத்தின் கண்முன் கொண்டு வந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வரலாற்றில் திரும்பவும் பொலிஸாரது அராஜகத்தை மீண்டும் ஒரு முறை இலங்கையில் அடையாளப்படுத்தி இருக்கின்றது.
தமிழர்களுக்கு இருந்த இறைமை காலணித்துவ ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டு சிங்கள அரசியல் தலைவர்களிடம் வழங்கப்பட்ட நாளான இன்றைய நாள் தமிழர்களுக்கு கறுப்பு நாளாகும்.
அத்துடன் தன்மீதான தாக்குதல் தொடர்பான காணொளி ஆதாரங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.