யாழ். மாவட்ட கூட்டுறவுச்சபை தலைவர் ராஜரட்னம் ராஜாராமிற்கு எதிராக சோசலிச சமத்துவ கட்சியின் சார்பில் யாழ். நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டதாக அக்கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமு சம்பந்தன் தெரிவித்தார்.
கடந்த மாதம் சோசலிச சமத்துவ கட்சியினரினால் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டமொன்றினை நடத்தவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கூட்டுறவு சபை தலைவர் சோசலிச சமத்துவ கட்சியினர் கூட்டம் நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு தடை விதித்துள்ளதாக தெரிவித்து கூட்டத்தினை நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை.
இதனால் அக்கூட்டம் மண்டபத்துக்கு வெளியில் நடாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சோசலிச சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில், யாழ். மாவட்ட இணைப்பாளரினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் கடந்த 25ஆம் திகதி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். மாவட்ட கூட்டுறவுசபை தலைவர் இராஜாராம், யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணையின் போது, பாதுகாப்பு அமைச்சு தடை விதித்துள்ளதென தான் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவிக்கவில்லை என அவர் பொலிஸாரிடம் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து யாழ். நீதிமன்றில் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.