யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நவிண்டில் மற்றும் செம்பியன்பற்று பகுதியில் இராணுவ முகாமில் படையினர் நடாத்தும் சிகை அலங்கரிப்பு நிலையங்களை தடை செய்து எமது வாழ்வாதாரத்திற்கு உதவுங்கள் என யாழ். மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் கூட்டுறவுச் சங்க பிரதிநிதி கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றபோதே இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதன்போது அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் சிகை அலங்கரிப்புத் தொழிலாளர் பல்வேறு இடர்களைச் சந்திக்கும் நிலையில் சிகை அலங்கரிப்புத் தொழிலாளரின் சமுர்த்திக் கொடுப்பனவுகூட நிறுத்தப்படுகின்றது.
இந்த நிலையில் வடமராட்சியின் நவிண்டில், செம்பியன்பற்று பகுதிகளில் உள்ள இராணுவ முகாமில் சிகை அலங்கரிப்பு நிலையம் நடாத்தப்படுவதனால் அப் பகுதி தொழிலாளர்கள் வருமான இழப்பினைச் சந்திக்கின்றனர்.
எனவே இராணுவத்தினர் நடாத்தும் சிகை அலங்கரிப்பு நிலையத்தை தடுத்து நிறுத்த இந்தக் குழு உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
படையினரின் பணி அதுவல்ல அதனால அக் கடைகள் மூடப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தபோது கூட்டத்தில் கலந்துகொண்ட இராணுவ அதிகாரி உடனடியாக அந்த இரு கடைகளும் மூடப்படும் என உறுதியளித்தார்.