காங்கேசன்துறை – நாகைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்!

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நாளை வெள்ளிக்கிழமை (20) முதல் நிறுத்தப்படும் என்று இந்திய துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14 ஆம் திகதி ஆரம்பித்ததது.

இந்தக் கப்பலில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாரம் முழுவதும் இயக்கப்படுவதற்குப் பதிலாக, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயணிகள் கப்பல் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவின் நாகையிலிருந்து பயணிகள் கப்பல் கடந்த 16 ஆம் திகதி 15 பயணிகளுடனும், 18 ஆம் திகதி 23 பயணிகளுடனும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணித்தது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவும், இந்தியாவின் நாகை துறைமுக விரிவாக்கப் பணி காரணமாகவும், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை வெள்ளிக்கிழமையுடன் (ஒக்.20) நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில், நாளை 20 ஆம் திகதி காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல், அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று இந்திய துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts