நீதித்துறையின் சுயாதீனத்துவத்தை உறுதிசெய்வதில் தலையிடுங்கள் – 7 தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டுக்கடிதம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச சமூகத்துக்கு எழுதியுள்ள கடிதம், வெள்ளிக்கிழமை (13) உரிய இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டு கடந்த மாத இறுதியில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு அவரது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்திருந்ததுடன், நாட்டிலிருந்தும் வெளியேறியமை பல்வேறு சர்ச்சைகளையும் நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் பல்வேறு கேள்விகளையும் தோற்றுவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தி சர்வதேச நாடுகளுக்கு கூட்டாகக் கடிதமொன்றை எழுதுவதற்கு 7 தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்திருந்தன.

இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்தேசிய கட்சி ஆகிய 7 கட்சிகளின் கூட்டுத்தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேச சமூகத்துக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதம் இன்றைய தினம் (13) உரிய இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படுமென கட்சி பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

அதன்படி முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும், தனக்கு அச்சுறுத்தல் இருந்ததை நீதிவான் வெளிப்படையாகவே கூறியிருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ் நீதிபதிக்கு எதிரான இத்தகைய அழுத்தங்கள் அவர் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் எதிரானவை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இவ்விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என்றும், நாட்டின் நீதிக்கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுவதை உறுதிசெய்யுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts