நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பம்!

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை நாளை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்று பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. நேற்று காலை இந்தியா – நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட குறித்த கப்பல் பகல் 1.15 இக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே இந்த பரிட்சார்த்த நடவடிக்கைகளின் போது வருகை தந்திருந்தனர் என்றும் குறித்த கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தில் சுமார் அரை மணி நேரம் நங்கூரமிடப்பட்ட பின்னர் மதியம் 1.45 மணியளவில் மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன்துறைக்கு வருகைத் தந்த கப்பலுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது, கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடல் பாதை, கடல் மற்றும் காலநிலை நிலவரம் போன்ற சகல விடயங்களும் கணக்கெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கப்பல் சேவையானது நாளைய முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்றுவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பயணிகள் தங்களுடன் 40 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகை – இலங்கை கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 27,000 ரூபாயும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாயும் அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts