பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும், குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பலாலி கிராம மக்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து 1990 ஆம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக இடம்பெயர்ந்து பல்வேறு இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.
குறிப்பாக சின்னவளை,பொலிகண்டி, நிலவன், கே.கே.எஸ்.மற்றும் ஆனைப்பந்தி ஆகிய ஐந்து இடைத்தங்கல் முகாம்களில் கடந்த 33 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த முகாம்களில் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த மக்கள் தொடர்ந்தும் மனிதநேய அமைப்புக்களின் உதவியுடன் தொடர்ந்தும் பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுத்து வந்த நிலையில் சுமார் 33 வருடங்களின் பிற்பாடு பலாலி வடக்கு (J/254) கிராம அலுவலர் பிரிவில் மேய்ச்சல் தரைக் கென ஒதுக்கப்பட்ட அரச காணியில் அவர்களுக்கு என காணி அளவீடு செய்யப்பட்டு, மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் அந்த மக்களின் சொந்த பூர்வீக காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என அந்த மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளதோடு அக்காணிகள் படையினர் வசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சுமார் 33 வருடங்கள் முகாம்களில் இருந்து பல்வேறு துன்ப துயரங்களுக்கு முகம் கொடுத்த தாங்கள் முகாம்களில் இருந்து முதலில் வெளியே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் இக்காணிகளை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்ததாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
5 முகாம்களை சேர்ந்த 49 குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் 45 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 4 குடும்பங்களுக்கு காணி வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 45 குடும்பங்களுக்கும் 13 1/2 ஏக்கப் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் இந்து கோவிலுக்கு 10 பரப்பு காணியும்,பாடசாலைக்கு என 2 ஏக்கர் காணியும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு ஒரு குடும்பத்திற்கு தலா 2 பரப்பளவு காணி ஒதுக்கப்பட்டுள்ளது.
மெசிடோ நிறுவனத்தின் உதவியுடனும் ஒத்துழைப்போடும் தாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டங்களின் பலனாகவே தமக்கு இக்காணி கிடைத்ததாக அந்த மக்கள் தெரிவித்தனர். தற்போது தமது மீள் குடியேற்றத்துக்கு என வழங்கப்பட்டுள்ள குறித்த காணியானது மேய்ச்சல் தரைக் கூறிய காணியாக உள்ளது.
குறித்த காணியில் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்க கூடிய நிலை காணப்படுவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இக்காணியானது மக்கள் வசிப்பதற்கு உகந்தது இல்லை எனவும், இந்த காணியில் தாங்கள் இதற்கு முன்னர் வசிக்கவில்லை என்றும் மக்கள் வசிக்காத காணியை யே தமக்கு வழங்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த காணியில் மக்கள் வசிப்பதாக இருந்தால் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக குறித்த காணிகளுக்கு சுற்று வேலி அமைத்தல் வேண்டும்,தற்காலிக கொட்டகைகள் அமைக்க வேண்டும்,குடிநீர் வசதி,மலசல கூட வசதி மற்றும் மின்சார வசதிகள் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
குறித்த மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களினால் உடனடியாக குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது எனவும்,அதற்கான உதவிகளை அரசாங்கத்திடம் இருந்தும் அரச சார்பற்ற அமைப்புகளிடம் இருந்தும் எதிர்பார்த்துள்ளனர்.
எனினும் எதிர் காலத்தில் தமது பூர்வீக காணிகளையே மீட்டெடுப்பதே தமது இலக்காக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எங்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்ற மெசிடோ அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு,குறித்த அமைப்பின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் எங்களுக்கு எந்த நேரத்திலும் பக்க பலமாக செயல்படுவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.