யாழ். மாநகர சபைக்கு சுகாதார பணியாளர்கள் 50 பேரை நியமிப்பது தொடர்பிலான பிரேரணை நிறைவேற்றம்

jaffna_municipalயாழ். மாநகர சபைக்கு புதிய சுகாதார பணியாளர்களை நியமிப்பதற்கு ஆணையாளர் செ.பிரணவ நாதனினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை 14 வாக்குகளினால் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் 2013 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாதாந்த பொதுக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை யாழ். மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, யாழ்.மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதனினால் யாழ். மாநகரசபைக்கு புதிய சுகாதார உத்தியோகத்தர்கள் 50 பேரை நியமிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையில் தற்போது 468 ஊழியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில், தினசரி 160 இற்கும் 180 இற்கும் இடைப்பட்ட சுகாதார ஊழியர்கள் கடமைக்கு வருவதாக சபையில் தெரிவிக்கப்பட்டது.

இப்பிரேரணைக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 14 பேர் ஆதரவாகவும் 9 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

அதேவேளை, யாழ். மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர் மு.ரெமீடியஸ் புதிதாக நியமிக்கப்படவுள்ள சுகாதார ஊழியர்களை சுகாதார பணியைத் தவிர வேறு வேலைக்கு அமர்த்தமாட்டோம் என்பதை சபையில் எழுத்து மூலம் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு பிரதி முதல்வர், ரமீஸ் சபையில் எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிப்பதாக உறுதியளித்ததற்கு இணங்க 14 வாக்குகளினால், புதிய சுகாதார பணியாளர்கள் 50 பேரை நியமிப்பது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

Related Posts