இலங்கையில் மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மருந்துகள் மற்றும் பல்வேறு நோய்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பல குழுக்களில் அங்கம் வகிக்கும் இலங்கை மருத்துவ சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணரான ஆனந்த விஜேவிக்ரம, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், அந்த தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு பல்வேறு சிக்கல்களின் சாத்தியம் மிகக் குறைவு என தெரிவித்துள்ளார்.
அந்த தடுப்பூசிகளை பெறாதவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்றுக்குள்ளாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது மிகவும் குறைவு. தடுப்பூசி பெறாமல் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கே இவ்வாறான பாதிப்புகள் அதிகமாக உள்ளது.
தடுப்பூசியால் நன்மையே தவிர எவ்வித தீமையும் இல்லை. இந்நாட்டில் தடுப்பூசிகளுக்கு எதிரான ஒரு குழுவினர் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை செய்து வருகின்றனர். அவர்கள் கோவிட் தடுப்பூசி மாத்திரமின்றி அனைத்து தடுப்பூசிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புகைபிடித்தல், உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மனஅழுத்தம் ஆகியனவே இதயநோய்களுக்கு பிரதான காரணமாக அமைவதாக களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணரான வைத்தியர் பத்திய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மன அழுத்தம் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் சிறுவயதிலேயே மாரடைப்புக்கு முகங்கொடுக்கும் அபாயத்தை தவிர்க்க முடியும் என களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் பத்திய ரணசிங்க மேலும் தெரிவித்தார்.