இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து முழுப் பொய்களை சொல்லி வருகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடுவதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் ஒருவரினால் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க நாட்டின் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகம் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் பிரபாகரனின் மரபணுப் பரிசோதனைக்காக அவரின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டதா என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபாகரனின் நெருங்கிய உறவினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்பட்ட பின்னர், உயிரிழந்தது அவர்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரின் உடலை தாங்கள் மரபணுப் பரிசோதனை செய்து உறுதிப்படுத்தினோம் என்று யுத்தம் முடிந்த ஓரிரு நாட்களில் அரசாங்கம் அறிவித்திருந்தது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் மரபணுப் பரிசோதனை செய்து கொள்வதற்கான வசதிகள் இருந்திருக்கவில்லை. இந்தியாவின் ஹைதராபாத்திலும், சிங்கப்பூர் போன்ற இடங்களில்தான் அந்த வசதி இருந்ததாக நாங்கள் அறிந்து கொண்டோம்.
ஆகவே யுத்தம் முடிந்த ஓரிரு நாட்களில் மரபணுப் பரிசோதனை செய்ததாக பொய்யான தகவலை அரசாங்கம் வெளியிட்டிருந்தது.
ஒருவேளை அவரின் உடல் என்று சொல்லப்பட்டதில் இருந்த ஒரு பகுதியை எடுத்துவைத்து, பின்னர் பிரபாகரனின் தந்தை, தாயார் அல்லது சகோதரர்களான டென்மார்க்கில் உள்ள மூத்த சகோதரர், இந்தியாவின் தமிழ் நாட்டில் வாழும் சகோதரி, கனடாவில் வாழும் மற்றுமொரு சகோதரி போன்றவர்களிடம் எந்த கால கட்டத்திலும் மரபணு மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை.
ஆனால் தந்தையாரும், தாயாரும், யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து 3 நாட்களின் பின்னர்தான் அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருந்து எடுக்கப்பட்டார்கள்.
அவர்கள் இராணுவ தடுப்புமுகாமில் இருந்த போது, அவர்களுக்கே தெரியாமல் அரசாங்கம் மாதிரிகளைப் பெற்றுக் கொண்டதா? அல்லது தந்தை இறந்த பின்னர் அவரின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டதா? அதேபோல வைத்தியசாலையில் இருந்தபோது அவரின் தாயாரின் மாதிரிகளும் அவர்களுக்கு தெரியாமல் பெறப்பட்டதா? என யோசிக்க தோன்றுகிறது.
பிரபாகரனின் தாயார் 2011 ஆம் ஆண்டு மாசி மாதம் 20 ஆம் திகதி காலமாகியிருந்தார். அவருடைய தகனக்கிரியைகள் 22 ஆம் திகதி நடைபெற்றது. அன்று நள்ளிரவு சிதையிலே இருந்த அவரின் அஸ்திகளின் மேலே 4 நாய்களை இராணுவத்தினர் சுட்டு போட்டு கோர தாண்டவத்தை ஆடிச் சென்றிருந்தனர்.
அப்போது வேண்டுமென்றால் தாயாரின் அஸ்தியைக்கூட எடுத்துச் சென்றிருக்க முடியும். இவ்வாறான நிலைமையிலே பிரபாகரனின் மாதிரிகளை நாங்கள் எடுத்து வைத்திருந்தோம்,
அதை அவருடைய தந்தை அல்லது தாயாரின் மாதிரிகளுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்தினோம் என்று சொல்வதற்கும் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் என்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது.
அரசாங்கம் பச்சைப் பொய்யை சொல்லுகின்றது. ஒரு பிரேத பரிசோதனை நடத்தப்படவேண்டும் என்றால், சட்டவைத்திய அதிகாரி முன்னால்தான் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் அவ்வாறான ஒன்று நடந்ததாக அரசாங்கம் இதுவரை கூறவில்லை. அதைவிட ஒரு நீதிபதி முன்னால்தான் மரண விசாரணை நடைபெறவேண்டும்.
நீதிபதிதான் பிரேத பரிசோதனை நடத்துவதற்கான உத்தரவை வழங்க வேண்டும். அவ்வாறான எதுவும் இங்கு நடக்கவில்லை. கருணாவையும், தயா மாஸ்டரையும் கொண்டு சென்று காட்டியவர்களுக்கு, ஒரு நீதிபதியையும் அல்லது ஒரு சட்டவைத்திய அதிகாரியையும், உலங்கு வானூர்தி மூலம் அழைத்துச் செல்வதற்கு அரசாங்கத்திற்கு என்ன தடை இருந்தது.
அரசாங்கம் தொடர்ந்தும் பொய்யையும், பித்தலாட்டமும் நடத்திக் கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே பொய்மையாக்குகின்றது.
தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புச் செய்வது உட்பட அரசாங்கம் நினைத்தவற்றை செய்வதற்கு தேசிய பாதுகாப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துவது போல, பிரபாகரனின் விடயத்தையும் மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு தேசிய பாதுகாப்பு என்பதை, நாட்டின் பாதுகாப்பு துறையும், படைத்துறையும் பயன்படுத்தியுள்ளது என்பதே உண்மை. என தெரிவித்துள்ளார்.