சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் : கஜேந்திரகுமார்

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நேற்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தொடர்ந்து இலங்கையில் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மீது இன வன்முறைகளை பிரயோகித்து வருகின்ற முப்படைகளிலும் இந்த பொலிசாரும் உள்ளடங்குகின்றனர்.

ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது.

எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் என்பதற்கு இது நல்ல ஒரு உதாரணமாகும்.

ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம் தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது எனது கைது எடுத்துக்காட்டுகின்றது.

அதாவது எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தரப்பு பொலிஸ் என்பதால் அந்த தரப்பையும் விசாரிக்க வேண்டிய பொறுப்பு பொலிசாரிடம் இருப்பதனால் விசாரணைகளை பக்கச் சார்பாக முன்னெடுத்து எங்கள் மீது ஒரு அடக்குமுறையை பிரயோகிக்கின்ற வகையிலேயே இந்த சம்பவம் கைது சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த சம்பவத்தை நாங்கள் மிகத் தெளிவாக நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

அந்த அடிப்படையிலே குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகள் மட்டத்திலே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றில் தெரிவித்தோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts