ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 15 மாதங்களைக் கடந்த நிலையில், பாக்முட் அருகே முன்னணி பகுதியிலிருந்து ரஷ்ய படைப்பிரிவுகள் பின்வாங்கியுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் தரைப்படை பிரிவு தளபதி தெரிவிக்கையில்,
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாக்முட்டின் சில பகுதிகளில் உக்ரைனின் எதிர்த்தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் சுமார் 2 கிலோ மீட்டர் வரை ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை சமாளிக்க முடியாது ரஷ்ய படை வீரர்கள் சிலர் தப்பியோடும் காணொளியும் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
ரஷ்யா முறையாக வெடிமருந்துகளை வழங்கத்தவறியதால் தங்களது வீரர்கள் பாக்முட்டில் இருந்து வெளியேறிக் கொண்டிருப்பதாக ரஷ்யாவின் வாக்னர் குழு தலைவர் கூறி வரும் நிலையில், அவரது கூற்றை மேற்கோள்காட்டி உக்ரைன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது, 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்த போரில் இதுவரை 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளதாகவும், 80 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.