வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்த சூழல் காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்கள் 11 வருடங்களுக்குப் பின்னர் அப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் 75 இற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றபோதும் அப்பகுதிக்கு எந்தவிதமான அடிப்படைவசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், வீட்டுவசதிகள் எதுவும் அற்ற நிலையில் தாங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வாழும் 75 குடும்பங்களும் ஒரு இடத்திலேயே குடிநீர்பெற்று வருவதாகவும் வரட்சியான காலங்களில் குடிநீர்பெறுவதில் பெரும் சிரமங்களை தாங்கள் எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தங்கள் தேவைகளை பெறுவதற்கு வேறுபிரதேசங்களுக்குச் செல்லவேண்டும் என்றால் 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பருத்தித்துறை மருதங்கேணி வீதிக்குச் நடந்து சென்றே போக்குவரத்து செய்யவேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.