கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (23) உயர்தரபரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோர் உட்பட பொதுமக்களிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை குறித்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 2,200 பரீட்சை நிலையங்களில், 278,196 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 53,513 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 331,709 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இதற்கமைய விசேட போக்குவரத்து திட்டங்களை இலங்கை ரயில்வே திணைக்களமும் இலங்கை போக்குவரத்து சபையும் அறிவித்துள்ளன.
பரீட்சை நாட்களில் குறிப்பாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் ரயில் ரத்து செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (23) 1,617 பேருந்து சேவைகளை இயக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.