இந்திய வீட்டுத்திட்டத்துக்கு அடுத்த கட்டத்துக்குரிய கிராம சேவையாளர்கள் பிரிவுகள் இனங்காணப்பட்டு பயனாளிகள் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன என்று யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்திய அரசின் நிதியுதவியில் யாழ். மாவட்டத்தில் 9 ஆயிரம் வீடுகள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் “பைலட்’ திட்டத்தில் 150 வீடுகள் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாகப் பயனாளிகளிடம் பணத்தை வழங்கி அவர்கள் மூலமாகவே வீடுகளை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக யாழ்ப்பாணத்தில் முதல் கட்டமாக தென்மராட்சி, வலி. வடக்கு, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புள்ளியிடல் மூலம் குறிப்பிட்ட சில கிராம சேவையாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு வீட்டுத்திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதற்கு அடுத்த கட்டப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் அதிக வீடுகள் தேவையாகவுள்ள கிராம சேவையாளர் பிரிவுகள் இனங்காணப்பட்டு அவற்றில் வீட்டுத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, இந்திய அரசு மற்றும் நடைமுறைப்படுத்தும் முகவர் நிறுவனங்களால் பின்பற்றப்படும் புள்ளியிடல் முறைமைகளுக்குப் பதிலாக 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீளக்குடியமர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, பயனாளிகள் தெரிவு யாழ். மாவட்டத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்தும் முகவர் நிறுவனங்கள், வடமாகாண விசேட செயலணி என்பன ஏற்றுக் கொள்ள மறுத்து வருவதால் இது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது எனவும் கூறப்பட்டது.