அச்சுவேலியில் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தவர்களில் இரண்டாவது சந்தேகநபர் யாழ்.மேல் நீதிமன்றினால் நேற்றுப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
யாழ்.மேல்நீதிமன்றில் ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் சந்தேகநபர் தொடர்பான பிணை விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சபாரட்ணம் ஜெயந்திரன் என்பவர் மட்டக்குழியில் வசித்து வந்த நிலையில் 2011 மார்ச் மாதம் அச்சுவேலிக்குச் சென்று அங்குள்ள வீடு ஒன்றைத் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அதன் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டால் ஏற்பட்ட மோதலில் ஜெயந்திரன் கொல்லப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டில் அச்சுவேலி மேற்கு கைத் தொழில் பேட்டையைச் சேர்ந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப் பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அவர்களில் இரண்டாவது சந்தேகநபரான அச்சு வேலியைச் சேர்ந்த இரட்ண சபாபதி மகாலட்சுமி என்பவரைப் பிணையில் விடுவிக்கக் கோரியே பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது.
அதனைப் பரிசீலித்த மேல் நீதிமன்று பிணை அனுமதி வழங்கியது. அதன் படி தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தவிர மாத இறுதியில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.