இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் நேற்று (08) முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரோடு இணைந்து பிரதேச மக்களும் மாவீரர் துயிலும் இல்ல வளாகம் சிரமதானம் செய்கின்ற வேலைகளில் பங்கெடுத்திருந்தனர்.

இந்த சிரமதான நடவடிக்கையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் பங்குபற்றியிருந்தார்.

சிரமதானம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் அப்பகுதிக்கு வருகைதந்து புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதோடு சிரமதானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் தொடர்பான பதிவுகளையும் மேற்கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பெரும் பகுதியை இராணுவம் அபகரித்து இராணுவ முகாம் அமைத்துள்ள நிலையில் துயிலும் இல்ல வளாகத்துக்கு வெளியே உள்ள சிறு நிலப்பரப்பிலேயே மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts