மதுபானம், போதைப் பொருள் பாவனைகளில் இருந்து இளம் சமூகத்தினரை விடுவிக்க கலாசார நிகழ்வுகள் ஊடாக அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பொது அமைப்புக்கள் முன்வர வேண்டும்.
பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரி எஸ்.அசோகரட்ணம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். வடமராட்சிப் பிரதேசத்தில் பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளில் கடந்த வருடங்களை விட 2011 ஆம் ஆண்டு சட்ட விரோத மதுபான உற்பத்தி, விற்பனை புகைபொருள்களை சிறுவர்களுக்கு விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
மதுவரித் திணைக்களத்தால் இந்தப் பிரதேசத்திலுள்ள கரவெட்டி, திக்கம், அல்வாய் மேற்கு போன்ற கிராமங்களில் சட்ட விரோத மது மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனையும், பாவனையும் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் கடந்த வருடம் நடத்தப்பட்டன.
அத்துடன் வடமராட்சிப் பிரதேசத்தில் மதுபாவனையற்ற கிராமத்தை உருவாக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் 16 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அந்தந்த கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக, சிறுவர்களுக்கு மதுபானம் புகையிலைப் பொருள்கள் விற்பனை, சட்ட விரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனைகளில் இருந்து விடுவித்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு அவற்றில் இருந்து மக்களை விடுவிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.
அப்படி இருந்தும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பு இன்மையால் சட்டவிரோத மதுபாவனை தொடர்பான குற்றச் செயல்கள் வடமராட்சிப் பிரதேசத்தில் தலைதூக்கியுள்ளன.
இந்த ஆண்டிலாவது சமூகம் சமுக கலாசார விழுமியங்களைப் பேணவும், கலாசார நிகழ்வுகள் ஊடாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் கிராம மட்ட பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தகர்கள் பொது மக்கள் எனப்பலரும் முன்வந்து ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.