கழிவகற்றல் வாகனங்களுக்கான இறக்குமதிக்கான செலவு நிதியை மீளப் பொறுப்பேற்குமாறு இப்போதைய பதில் முதல்வர் ஈசன் காலத்தில் யாழ்.மாநகர ஆணையாளர் ஜப்பான் தூதரகத்துக்கு எழுத்து மூலம் கடிதம் எழுதினார் என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ் மாநகர சபையின் முதல்வர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜப்பானிலிருந்து யாழ்.மாநகர சபைக்கு பாவித்த நான்கு கழிவகற்றல் வாகனங்கள் இறக்கப்பட இருந்த நிலையில் அவர்களால் யாழ்.மாநகர சபைக்கு இறக்குமதிச் செலவுக்காக சுமார் 14 மில்லியன் ரூபாய் வங்கியில் வரவிடப்பட்டது.
இந்நிலையில் நான் யாழ்.மாநகர முதல்வராக பதவியேற்றதன் பின்னர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அதனை செயல்படுத்த முடியவில்லை.
இவ்வாறான நிலையில் நான் பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற போது பிரதி முதல்வராக இருந்த ஈசனை பதில் முதல்வராக நியமித்து விட்டு சென்றிருந்தேன்.
அக்காலப் பகுதியில் ஜப்பான் வாகனத்தை பெற்றுக்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில் வைப்பிலிட்ட நிதியை பொறுப்பேற்குமாறு அக்காலப் பகுதியில் பதில் முதல்வராக இருந்த ஈசன் பொறுப்பில் இருந்த போது யாழ்.மாநகர ஆணையாளர் ஜப்பான் தூதரகத்துக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பினார்.
ஆனால் சபை உறுப்பினர்கள் ஒரு பகுதியினர் தமக்கு தெரியாமல் எவ்வாறு நிதி திருப்பியும் அனுப்பப்பட்டது என கேள்வி எழுப்பி சபைக் கூட்டத்தை வெளி நடப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததோடு அதற்கான பதிலை அப்போதைய பதில் முதல்வரிடமே பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆகவே நான் வெளிநாட்டில் இருந்த போது எனக்கு தெரியப்படுத்தாமல் வாகன இறக்குமதி நிதியை பொறுப்பேற்க்குமாறு பதில் முதல்வர் ஆணையாளர் ஊடாக கடிதம் அனுப்பியமைக்கு பதில் முதல்வரே பொறுப்பேற்க வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.