விசேட நில அளவையாளர்கள் குழு இரகசியமாக குருந்தூர் மலைக்கு சென்றதா?

கொழும்பில் இருந்து சென்ற விசேட நில அளவையாளர் குழுவொன்று இரகசியமாக குருந்தூர் மலையில் நில அளவை செய்வதாக தகவல் வெளியாகிய நிலையில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஸ் உள்ளிட்டோர் குருந்தூர்மலை அளவீட்டை தடுத்து நிறுத்தும் நோக்கோடு அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

கொழும்பிலிருந்து சென்ற விசேட நில அளவையாளர் குழு ஏற்கனவே குருந்தூர் மலையை அண்டிய பகுதியில் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு சொந்தமான 632 ஏக்கர் காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கோடு அளவீட்ட்டு பணிகளை மேற்கொள்வதற்காக வருகைதந்துள்ளதாக அறிந்தே இவர்கள் அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.

இவர்கள் குருந்தூர் மலைக்கு வருகைதருவதற்கு முன்னரே இராணுவ வாகனம் ஒன்றும் பொலிஸாரும் அப்பகுதிக்கு வருகைதந்திருந்த நிலையில் போராட்டத்துக்காக வருகை தந்தவர்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டதோடு அவ்வாறு ஒரு அளவீடு இடம்பெறுவது தொடர்பில் அறிந்தே தாமும் வருகை தந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருந்த போதிலும் இவர்கள் வருகையை அறிந்த நில அளவையாளர்கள் எவரும் அளவீட்டுக்கு வருகைதரவில்லை. ஆனால் அளவீட்டுக்காக கொழும்பிலிருந்து வருகை தந்த 20 பேர் கொண்ட குழு ஒன்று முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts