ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன. ரஷ்யா முழுவதும் 37 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தலைநகர் மொஸ்கோவில் 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுதந்திர OVD-Info எதிர்ப்பு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த பகுதி அணிதிரட்டல் அவசியம் என்று புடின் கூறியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து 210 நாட்களை கடந்துள்ள நிலையில், முதன் முறையாக இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய தேசிய உரையின் போது புடின் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷ்ய இராணுவ அணி திரட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்யா உடனான போரில் ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்ட உக்ரைன் தற்போது வேகமாக முன்னேறி வருகின்றது. ரஷ்யாவின் பிடியில் இருந்த வடக்கு கார்கிவ் பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களை உக்ரேனியப் படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையிலேயே, ரஷ்ய ஜனாதிபதி இராணு அணித்திரட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான ஆணையில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த ஆணை தொடர்பான விவரங்கள் குறைவாக உள்ளன.
எண்கள் மீதான வரம்பு பற்றியோ அல்லது மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்யாதது போன்ற விதிவிலக்குகள் பற்றி எதுவும் கூறவில்லை. மாறாக, ஒதுக்கீட்டை எவ்வாறு சந்திப்பது என்பது பிராந்திய தலைவர்களுக்கு விடப்பட்டுள்ளது.
இதன்படி, அணிதிரட்டலில் இருந்து விலக்கு பெறுபவர்களை மிக விரைவில் அறிவிக்கும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், புடினின் இந்த அறிவிப்பு உக்ரைனை இரத்தத்தில் மூழ்கடிக்க விரும்புவதை இது காட்டுகிறது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், புடினின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.