இலங்கை அரசின் முக்கிய பரப்புரை இணையங்களில் ஒன்றான, தேசிய பாதுகாப்புக்காக ஊடகத் தகவல் மையத்தின் இணையத்தளம், “கேம்ஓவர்” என்று அறியப்பட்ட ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றாகச் செயலிழந்துள்ளது.
இந்த இணையத்துக்குள் ஊடுருவியவர், அதைச் சீர்குலைத்ததுடன், அதில் தனது செய்திகளை உள்ளிட்டதுடன், அதன் சேவை வழங்கி ஊடாக இன்னொரு தளத்தினுள் நுழையவும், ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் இந்த இணையத்தளத்தின் பயனாளர்கள் பற்றிய நூற்றுக்கணக்கான புகுபதிவுத் தகவல்களும் அவரால் திருடப்பட்டுள்ளன.
தற்போது, ஊடுருவல் பக்கம் நீக்கப்பட்டுள்ளதுடன், தளத்தில் மேம்பாட்டு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், 100 வீதம் முன்னைய நிலைக்குத் திரும்பும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளம் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் செயற்பட்டு வந்ததுடன், இதன் ஊடாக இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, லக்ஸ்மன் ஹுலுகல்ல போன்றோர் பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர்.
முன்னதாக, பங்களாதேஸ் சேர்ந்த இணைய முடக்கிகளால், இலங்கை அரசின் வடமத்திய மாகாணசபையின் 22 துணை இணையத்தளங்கள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.