தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களும் அரசியல் பழிவாங்கும் செயல்’ என தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தினை மூடுமாறு கோரி கிளிநொச்சியில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பில் கருத்துவெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“மகிந்த ராஷபக்ஷ அரசாங்கம் தமிழ் உறுப்பினர்களை குறிவைத்து ஒவ்வொரு வருடமும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதுடன், பல்வேறு வகையான குற்றங்களையும் சுமத்தி வருகின்றது. இன்று சிறிதரனுக்கு நடக்கும் ஒவ்வொரு பழிவாங்கும் செயற்பாடுகளும் கடந்த 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் எனக்கும் ஏற்பட்டது.
எனது வீட்டில் கிளைமோர் இருப்பதாக கூறி சோதனைகள் செய்தனர். பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டனர். அவ்வாறான சந்தர்ப்பங்களையும் எதிர்ப்புக்களையும் தாண்டி நாம் செயற்பட்டு வருகின்றோம். அரசாங்கம் என்னதான் பழிவாங்கும் செயல்களை செய்தாலும், உண்மை அழிந்து போகாது.
இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு புதிதில்லை, ஆனாலும் அரசாங்கம் தனது பழிவாங்கும் செயற்பாடுகளை திட்டமிட்டப்படி நடைமுறைப்படுத்தி வருகின்ற போதிலும் அவற்றினை எதிர்த்து நின்று போராட நாம் தயாராக இருக்கின்றோம். அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ என்றும் அவர் மேலும் கூறினார்.
இதே வேளை எதிர்வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெறுவதாக உத்தேசிக்கப்பட்ட டெலோ கட்சியினரின் மாநாடு பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இம்மாத இறுதியில் வெளிநாட்டு விஜயமொன்றை கட்சி முக்கியஸ்தர்கள் மேற்கொள்ளவிருப்பதால் உத்தேசிக்கப்பட்ட மாநாடு எதிர்வரும் பெப்ரவரி இறுதிக்குள் நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.