தமிழர்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் : ஜனாதிபதி ரணில்

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் என அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதன் பிரகாரம் இன்று காலை 10.30 மணிக்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார்.

அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி மூன்றாவது கூட்டத்தொடருக்கு தலைமை தாங்கினார். இதன்போது செயலாளர் நாயகம் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டமை மற்றும் பாராளுமன்றத்தை கூட்டுதல் பற்றிய பிரகடனத்தை சபைக்கு வாசித்தார்.

இதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை ஆற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி,

நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் நன்றி தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்வதே நெருக்கடிகளை தீர்ப்பதற்கான சிறந்த வழிமுறையாகும் என குறிப்பிட்டார்.

அமைதியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். நான் அதனை பாதுகாப்பேன். எனினும் வன்முறைகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் இடமளிக்க முடியாது. அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக என்னால் எவ்வித பழிவாங்கல்களும் முன்னெடுக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள பல முக்கிய விடயங்களை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாராளுமன்றத்தில் அனைவரது இணக்கப்பாட்டையும் எதிர்பார்க்கின்றேன் எனவும் கேட்டுக்கொண்டார்.

Related Posts