ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிபொருள் விநியோகத்தை கடுமையாக குறைப்பதாக ரஷ்ய எரிசக்தி நிறுவனமான Gazprom அறிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் பிரதான குழாய் வழியாக எரிவாயு விநியோகத்தை கடுமையாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
Nord Stream 1 குழாய் வழியில் மற்றொரு விசையாழியை நிறுத்துவதன் மூலம் நாளாந்தம் எரிவாயு உற்பத்தியை 20 வீதமாக குறைந்துள்ளது. இதனால், தற்போதைய விநியோக அளவை பாதியாக குறைப்பதாக Gazprom நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிவாயு விநியோகத்தை கட்டுப்படுத்த எந்த தொழில்நுட்ப காரணமும் இல்லை என்று ஜேர்மன் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், குளிர்காலத்திற்கு முன்பு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் எரிவாயு தேவையை முழுமையாக நிவர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயுவை செலுத்தும் Nord Stream 1 குழாய், பல வாரங்களாக திறனுக்கும் குறைவாக இயங்கி வருகிறது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் 10 நாள் பராமரிப்பு பணிகளுக்காக முற்றிலும் மூடப்பட்டது.
கடந்த ஆண்டு ரஷ்யா தனது 40 வீத எரிவாயுவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கியது, மேலும் ரஷ்யா ஆற்றலை ஆயுதமாக பயன்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியது. ரஷ்யா எச்சரித்ததை அடுத்து, அடுத்த ஏழு மாதங்களில் எரிவாயு பயன்பாட்டை 15 வீதம் குறைக்குமாறு நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
கடைசியாக இயங்கும் இரண்டு விசையாழிகளில் ஒன்றின் “தொழில்நுட்ப நிலை” காரணமாக விநியோக குறைப்பு புதன்கிழமை மாலை 04:00 GMT இல் தொடங்கும் என்று Gazprom நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தங்களிடம் உள்ள தகவலின்படி எரிவாயு விநியோகம் குறைக்கப்படுவதற்கு எந்த தொழில்நுட்ப காரணமும் இல்லை என்று ஜேர்மன் பொருளாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிவாயு விநியோகத்தில் சமீபத்திய இடையூறுகளுக்கு மேற்கத்திய தடைகளை ரஷ்யா காரணம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தன் பின்னர் அந்நாட்டிற்கு எதிராக பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைத்துள்ளதாக பல்வேறு தரப்பினர்களும் குற்றம் சமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.