நெருக்கடிக்குள் மக்களை தொடர்ந்தும் தள்ளாமல் ஜனாதிபதியும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் – பேராயர்

நாட்டில் ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது நாட்டின் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன, சஜித் தரப்பினர் உடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை.

நாட்டை கட்டி எழுப்புவதுற்கு நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஸ்திரமான சர்வ கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதே நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது என கொழும்பு பேராயார் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவுகின்ற அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஆக்கபூர்வமான வேலைத்திட்டமொன்‍றை உருவாக்க வேண்டும்.

இதற்காக சகலரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார் .

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது நாட்டின் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேனவுடன் இணைத்து செயற்படுவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பு பேராயர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (5) பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

” நமது தாய் நாடு முன்னெப்போதும் இல்லாதவாறு பொருளாதார சிக்கல்களுக்கு சிக்கியுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிக்குள் மக்களை தொடர்ந்தும் தள்ளாமல் ஜனாதிபதியும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து தாய் நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒன்று சேர்ந்து சர்வ கட்சி அரசாங்கமொன்றை அமைக்க முன்வர வேண்டும்.

புதிய தலைவராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வருவார். சர்வதேச உதவிகளுடன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏனைய விடயங்கள் சீரடையும் என கருதியே நாம் சற்று மெளனமாக இருந்தோம்.

ஆயினும், நாட்டின் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்ட‍ே செல்கிறதே தவிர மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் இருக்கிறது.

எமது நாடு கடந்த இரண்டரை ஆண்டுகளாக மிகவும் குழப்பமான சுழ்நிலையிலேயே உள்ளது. இதற்கு நேரடியாக ஜனாதிபதியும், அரசாங்கமும் ஆகும். இக்காலப் பகுதியில் தூர நோக்கமற்று தெளிவற்ற தீர்மானங்களை எடுத்ததன் விளைவாகவே நாடு இத்தகையதொரு பொருளாதார சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கிறது.

மக்களின் பணம் மற்றும் நாட்டின் பொது சொத்துக்கள் மோசமான வகையில் சூறையாட்டது. மக்களை சுரண்டி தான்தோன்றித்தனமான மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு எதிராக நாம் ஆரம்பத்திலிருந்தே கண்டித்து வந்தோம். ஊழல், மோசடி குற்றங்களுக்கு எதிராக வெளிப்படையான விசாரணைகள் நடைபெறவில்லை என்பதுடன் குற்றவாளிகளுக்கு தண்டணை அளிக்கப்படவில்லை.

நாட்டின் பொருளாதாரம், எரிபொருள், மின்சாரம், சுகாதாரம், விவசாயம், கல்வி ஆகிய எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படவில்லை. நாட்டு மக்கள் நாளாந்தம் ஒவ்வொரு தேவைகளுக்காகவும் நீண்ட வரிசைகளில் காத்து நிற்பது அரசாங்கத்தின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.

நாட்டின் அரசியல் தலைவர்கள் தங்களுக்குள்ள அரசியல் அதிகாரங்களை தமது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தாது மக்களின் தேவையை அறிந்து மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும்.

இனிமேலும், தங்களது அரசியல் அதிகார கதிரைகளை வீணாக சூடாக்கிக் கொள்ளாமல் பதவிகளிலிருந்து விலக வேண்டும். நமது தாய்நாடு எதிர்கொண்டுவரும் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்தும் துன்பகரமான நிலையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

Related Posts