அடுத்த கப்பல் வரும் வரை எரிபொருளை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் – அரசாங்கம்

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகள் 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளன.

அரசாங்கத்திடமுள்ள மிகக் குறைந்தளவிலான எரிபொருள் இருப்பினை அடுத்த கப்பல் வரும் வரை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்து ஏனைய துறைகளைச் சேர்ந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதற்கமை எரிபொருளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய அத்தியாவசிய சேவைகளாக போக்குவரத்து, சுகாதாரம், விமான நிலையம், புகையிரதம், துறைமுகம் மற்றும் முப்படை உள்ளிட்டவை அரசாங்கத்தினால் பெயரிடப்பட்டுள்ளன.

இவற்றில் ஊடகம், வங்கி, விவசாயம், மீன்பிடித்துறை மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளடக்கப்படவில்லை.

நாட்டு மக்களுக்கு 24 மணித்தியாலங்களும் செய்திகளை உடனுக்குடன் வழங்கும் இலத்திரனில் மற்றும் அச்சு ஊடகங்களும் இதனால் பாதிப்படைந்துள்ளன.

எனவே மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் நேரங்களில் மின் பிறப்பாக்கிகளை இயக்குவதற்கான எரிபொருளையாவது வழங்குமாறு ஊடக நிறுவங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனியார் பஸ்கள் மாத்திரமின்றி முச்சக்கரவண்டி சேவைகளும் நேற்றைய தினத்தில் வழமைக்கு மாறாக ஸ்தம்பிதமடைந்திருந்தன.

புகையிரதங்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேரூந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் , புகையிரதங்களில் பெருமளவான பயணிகள் நெறிசலுடன் பயணிப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பதிவு செய்து சிட்டைகளை வழங்கி, அந்த ஒழுங்குமுறையின் அடிப்படையில் பொது மக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று கடந்த ஞாயிறன்று அறிவிக்கப்பட்டது. அதற்கமைய 27 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சிட்டைகளும் வழங்கப்பட்டன.

ஆனால் அதன் பின்னர் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த சில தினங்களாகவே எரிபொருள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த திடீர் அறிவிப்பை அடுத்து குருணாகல், கந்தளாய், அம்பாந்தோட்டை, தம்பதெனிய பிரதான வைத்தியசாலை, ஹொரவபொத்தான உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எவ்வாறிருப்பினும் இந்த நெருக்கடிகள் காரணமாக தலைநகர் கொழும்பில் வாகன போக்குவரத்து வழமையை விட மிகக் குறைந்தளவிலேயே காணப்பட்டது. புறக்கோட்டை தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் மிகக் குறைவான பேரூந்துகளே காணப்பட்டன.

சேவையில் ஈடுபட்ட பேரூந்துகளிலும் வழமைக்கு மாறாக மிகக் குறைந்தளவிலேயே பயணிகள் பயணித்ததாக சாரதிகள் தெரிவிக்கின்றனர். சேவையில் ஈடுபடும் பேரூந்துகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டமையினால் , பெரும்பாலானோர் புகையிரதங்களில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts