இனப்பிரச்சினைக்கு தீர்வை காணத்தவறியதாலேயே நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது- சம்பந்தன்

நாடு எதிர்கொண்டுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமிழ்தேசிய பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் அது மிகவும் முக்கியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தீர்க்கப்படாத பிரச்சினை சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் தலைமைத்துவம் தவறவிட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களை நினைவுகூர்ந்துள்ள சம்பந்தன் அரசியல் தலைமையின் இவ்வாறான நடவடிக்கைகள் இனமோதல் தீவிரமடைவதற்கும் நாட்டை நீடித்த உள்நாட்டு போருக்குள்ளும் தள்ளியது எனவும் தெரிவித்துள்ளார்.

ஊழல் தவறான நிர்வாகம் பிழையான முன்னுரிமைகள் ஆகியன இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் தமிழ் மக்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளிற்கு மத்தியில் பல வருடங்களாக இடம்பெற்ற மோதல்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்துள்ளன எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

30 வருடங்களாக நீடித்த யுத்தத்திற்கு தமிழ்மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளே காரணம் யுத்தத்திற்காக மிகப்பெருமளவு பணம் செலவிடப்பட்டது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் யுத்தம் இடம்பெறாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலை இந்தளவிற்கு பாதிக்கப்பட்டிராது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வை காண்பது இலங்கை தன்னை பற்றி சர்வதேச அளவில் புதிய தோற்றப்பாட்டை காண்பிப்பதற்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களும் தங்கள் இறைமையை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் அரசமைப்பின் மூலம் அனைத்து சமூகத்தினரும் இணைந்து பாடுபட்டு நாட்டை கட்டியெழுப்பலாம் நாங்கள் ஐக்கியப்பட்டுள்ளோம் என்பதை காண்பிக்கலாம் என தெரிவித்துள்ள சம்பந்தன் மோதலிற்கு தீர்வை காணாமல் எவ்வாறு பொருளாதார முன்னேற்றம் சாத்தியம் என்பது எனக்கு தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts