இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியில் இருந்து கலையரசி எனும் தமிழ் மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக்குத் தெரிவாகியுள்ளமை பல்வேறு தரப்புகளின் கவனங்களையும் ஈர்த்துள்ளது.
கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் கலையரசிக்கு 16 வயதாகிறது. சிறிய வயதிலிருந்தே – தான் கிரிக்கெட் விளையாடி வருதாக அவர் தெரிவிக்கின்றார்.
கலையரசியின் தந்தை சதாசிவம் – கூலி வேலை செய்பவர், அம்மா சசிகலா – இல்லத்தரசி. ஒரு தம்பியும், தங்கை ஒருவரும் கலையரசியின் உடன் பிறந்தவர்கள்.
“வயல் வெளிகளில் அண்ணாமார் கிரிக்கெட் விளையாடும் போது, எனது சின்ன வயதில் அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடுவேன். எனது அப்பாதான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்” என்கிறார் கலையரசி.
அவரின் தந்தை தாம் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்கிறார். “தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகளை விரும்பிப் பார்ப்பேன். எனது பிள்ளைகளையும் கிரிக்கெட்டில் சேர்த்து விட வேண்டுமென்று மனதுக்குள் ஓர் ஆசை இருந்தது. அது இப்போது மகள் மூலம் நிறைவேறியிருக்கிறது. தேசிய மகளிர் அணியில் எனது மகள் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்” என, தனது ஆசையை சதாசிவம் பகிர்ந்து கொண்டார்.
பாடசாலைகளுக்கிடையிலும், கிளிநொச்சி மாவட்டம், வடக்கு மாகாணம் போன்ற மட்டங்களிலும் விளையாடியுள்ள கலையரசி 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தேசிய மட்டப் போட்டிகளிகளிலும் பங்குபற்றியுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு வீரர்களை இணைத்துக் கொள்வதற்கான தேர்வு – கடந்த மார்ச் மாதம் தம்புள்ளயில் நடைபெற்ற போது, அதில் கலையரசியும் கலந்து கொண்டார். இந்த நிலையில், குறித்த அணிக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என, மே இறுதியில் அறிவிக்கப்பட்டதாக, கலையரசியின் பயிற்சியாளர் ஜீவரட்ணம் பிரியதர்ஷன் கூறினார்.
“கலையரசி 07ஆம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து அவருக்கு பயிற்சியளித்து வருகின்றேன். மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் நடந்த போட்டிகள் அனைத்திலும் அவர் பிரகாசித்துள்ளார். கலையரசியின் கடுமையான அர்ப்பணிப்புத் தான் அவர் இந்த நிலையை எட்டுக்குவதற்குக் காரணமாக அமைந்துள்ளது” எனவும் பிரியதர்ஷன் தெரிவிக்கின்றார்.
“இத்தனைக்கும் கடின பந்து கிரிக்கெட் விளையாடுவதற்குரிய போதுமான உபகரணங்கள் எவையும் கலையரசியிடம் சொந்தமாக இல்லை. அவரிடமிருந்த ´பேட்´ கூட நல்லதில்லை. என்னிடமிருந்த சில உபகரணங்களை அவருக்கு வழங்கினேன். மாவட்ட பயிற்சியாளர் ஒரு பேட்டை வழங்கினார். அவருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் கிடைக்குமாயின் பேருதவியா இருக்கும்”, எனவும் பயிற்சியாளர் பிரியதர்ஷன் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையிலும் கிரிக்கெட் அனைத்துத் துறைகளிலும் கலையரசி சிறந்து விளங்குவதாகவும் அவரின் பயிற்சியாளர் கூறினார்.
கலையரசியின் தந்தை, கூலி வேலையில் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்தி வருகின்றார். அதற்குள்தான் தனது மகளை கிரிக்கெட் துறையில் உயர்ந்த நிலையில் வைத்துப் பார்ப்பதற்கான செலவுகளையும் அவர் ஈடுசெய்ய வேண்டியுள்ளது.
“கிரிக்கெட் பயிற்சி மற்றும் போட்டிகளுக்காக அந்த ஊருக்கு வாருங்கள், இந்த ஊருக்கு வாருங்கள் என்று கலையரசியை அழைப்பார்கள். செலவுகளை யோசித்துக் கொண்டிருக்க முடியாது; அழைத்துக்கொண்டு செல்வேன். எனது வருமானத்தில் அதிகமானதை அவருக்காகவே செலவிடுகிறேன்” என, தனது நிலையை பிபிசியிடம் தந்தை சதாசிவம் பகிர்ந்து கொண்டார்.
19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய கிரிக்கெட் பெண்கள் அணிக்காக, இம்முறை 15 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் தமிழர்கள். கலையரசியுடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிஸ்ரிகா செல்வராசா எனும் தமிழ் மாணவியும் தெரிவாகியுள்ளார்.